23/10/2024, பகவத்கீதை, பகுதி 69
- mathvan
- Oct 23, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பொதுப்படையான செய்திகளைப் பார்த்துவிட்டுப் பரமாத்மாவிற்குச் செவி சாய்ப்போம்.
இல்லற வாழ்க்கையின் பருவங்களை நான்காகப் பிரிக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். அவையாவன: 1. கற்கும் பருவம்; 2. வாழும் பருவம்; 3. ஓய்வு எடுக்கும் பருவம்; 4. விலகும் பருவம்.
இந்த நான்கனுள் ஒரளவாவது நம் கட்டுப்பாட்டில் இருப்பன வாழும் பருவமும், ஓய்வெடுக்கும் பருவமுமாம்.
பெரும்பான்மை கருதி, கற்கும் பருவத்தையும் வாழும் பருவத்தையும் இணைத்து இல்லறவியல் என்றும், ஓய்வெடுக்கும் பருவத்தையும் விலகும் பருவத்தையும் இணைத்துத் துறவறவியல் என்றும் நம் வள்ளுவப் பேராசான் குறிக்கிறார். அஃதாவது, இல்லற வாழ்விற்கு ஓர் முழுமையான நூலாக ஆக்கித் தந்துள்ளார்.
வள்ளுவப் பேராசான் குறிக்கும் துறவறவியலில் இருப்பவர்களும் இல்லறப் பாதையினில் இருப்பவர்களே.
இவர்கள் ஓய்வெடுக்கும் பருவத்தினில் தகுந்த பக்குவம் பெற்று முற்றும் நீத்தவர்களாக மாறி மன அமைதியுடன் இந்த உலகை விட்டு நீங்க முயல்பவர்களாக இருப்பதுதாம் இவர்களுக்குச் சிறப்பு.
ஓய்வெடுக்கும் பருவத்தினில் இருப்பவர்களுக்கும் கடமைகள் உள்ளன. இவர்கள் செய்ய வேண்டியன பல உள. தவிர்க்க வேண்டியனவும் பல உள. விட்டேற்றியாகத் திரிய இவர்களுக்கு உரிமையில்லை. இவர்களை ஆற்றுப்படுத்ததான் துறவறவியல் என்னும் அதிகாரத்தினை நம் வள்ளுவப் பெருந்தகை பாடியுள்ளார்.
வாழ்க்கை வெறுத்துவிட்டது நான் துறவியாகிறேன் என்பது ஏற்புடைய கருத்து அல்ல! சிலர் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இயலாமையினால் துறவு என்பது சராசரி வாழ்க்கையில் இருந்து இயல்பிற்கு மாறாக வெகு தூரம் தள்ளிச் செல்லும் பிரிவு. இந்தப் பிரிவைனை விதிவிலக்காகக் கருத வேண்டும் (Outliers). இவர்கள் வாழ்க்கையின் அழுத்தத்தில் உடைந்து போனவர்கள்.
துறவறவியலில் குறிக்கப் பெறுபவர்களும் முற்றும் துறந்து முனிவர்களாக இருப்பவர்களும் வேறு வேறு பிரிவினர் என்பதனை நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தின் மூலமாகப் பிரித்துக் காட்டியுள்ளார். இந்த முற்றும் துறந்தவர்களின் (நீத்தார்) துறவு என்பது அதிமேலான துறவு. பல அருளாளர்கள் இவ்வகையே. இவர்கள் உலகிற்கே வழிகாட்டும் பணியினை ஏற்கிறார்கள்.
முற்றும் துறந்தவர்களின் மனம் எப்பொழுதும் அமைதியிலேயே நிலைக்கும்; இல்லறத்தில் இருந்து கொண்டே பற்றில்லாமல் தன் கடமைகளைச் சரியாகச் செய்பவர்களும் மனம் அமைதி பெறும்.
முற்றும் துறந்தவர்களின் வாழ்வியல் மிகக் கடினமானது. அனைவர்க்கும் சுலபமாகக் கைக்கூடி வாரா. பல முனிவர்கள் சறுக்கிவிடுகின்றனர் என்பதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த உயரத்தில் இருந்து விழுந்தால் அடி பலமாகத்தான் இருக்கும். இஃது இயல்பிற்கு மாறாக வேடம் போட்டதனால் உண்டாவது.
இது நிற்க.
சந்நியாசம் மூன்று வகை! ஒன்று கொள்கைக்காகச் சந்நியாசம் கொள்வது; இரண்டாவது வகை என்னவென்றால் இயலாமையால் சந்நியாசம் போவது; மூன்றாவது வகையானது அப்பொழுதைக்கு அப்பொழுது “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று செயல்களில் இருந்து விலகி நிற்பது!
இல்லறத்தில் இருந்து ஆங்கே அவர் உணர்ந்த அறிவினால் ஞானம்கூட சந்நியாசப் பாதையில் சென்றவர் புத்தர் பிரான். அஃதாவது, கொள்கைத் தேடலை ஆரம்பித்து ஞானத்தின் எல்லையைத் தொட்டவர். அஃதாவது, முதல் நிலை சந்நியாசத்தில் பயணிப்பவர்கள் முற்றும் துறந்தவர்கள்.
இரண்டாம் நிலை சந்நியாசம் என்பது இல்லறத்தில் ஏற்பட்ட இடர்களால் சந்நியாசப் பாதையினில் தள்ளப்பட்டவர்கள். இவர்களுக்கு ஞானம் கைக்கூடலாம். விட்ட குறை, தொட்ட குறையாக இறுதிவரை தாம் யார் என்றே தெரியாமலும் போகலாம். இவர்கள் விதிவிலக்குகள்.
மூன்றாவது வகையினில்தாம் பெரும்பாலோனோர் அடங்குவர். இந்தச் சந்நியாசத்தைத்தான் பரமாத்மா தவிர்க்கச் சொல்கிறார்.
அர்ஜுனனும் நம்மாளுதான்!
இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு மனம் மயங்கி நிற்கும் அர்ஜுனனுக்குத் தெளிவுபடுத்துகிறார்.இவரை நெறிப்படுத்தும் விதமாகத்தான் பரமாத்மா வழிகாட்டுகிறார்.
உளியின் தாக்குதலைத் தாங்கும் கல்தான் சிலையாகிறது; அழுத்தத்தைத் தாங்கும் கரிமம்தான் வைரமாகிறது; அஃதும் பட்டை தீட்டப்படும்போதுதான் அதன் மதிப்பும் மரியாதையும் கூடுகின்றன.
பரமாத்மா தொடர்வார். நாளைச் சந்திப்போம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments