23/12/2024, பகவத்கீதை, பகுதி 129
- mathvan
- Dec 23, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பெரும்பாலான உயிர்களின் இயல்பு கீழ் நோக்கியே இருப்பது. எல்லாரையும் சொல்லவில்லை. சண்டைக்கு வராதீர்கள். என்னைப் போன்றோரைச் சொல்கிறேன்.
சரி, அந்த ஆதி காலத்தில் இருந்த உயிர்கள் தன்னையறியாமலேயே மலத்துக்குள் நுழைந்துவிட்டதாம். ஆன்மா தன் அறிவினை இழந்ததாம்.
நீண்ட நெடிய ஒரு அரங்கு. அந்த அரங்கு கும்மிருட்டில் மூழ்கி உள்ளது. ஒருவன் அந்த அரங்கினுள் நுழைந்து அந்த இருளுக்குள் செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக நகருவான். போகப் போக அவனின் வேகம் குறையும். ஒரு புள்ளிக்கு மேல் அவனால் எங்கு காலடி எடுத்து வைப்பது என்று தெரியாமல் கல் போல உறைந்து நிற்பான்.
அந்தக் கல் போல ஆன்மாவும் மலம் என்னும் இருளுக்குள் அகப்பட்டு நிற்குமாம். இந்த நிலைக்குப் பாடாண நிலை என்கிறார்கள் சைவ சிந்தாந்திகள். பாடாணம் என்றால் கல்.
நீங்களும் கவனித்திருக்கலாம். நீத்தார்களுக்குச் சடங்கு செய்யும் பொழுது கல்லை வைத்துப் பூசை செய்து, அந்தக் கல்லுடன் மேலும் இரண்டு கல்களையும் சேர்த்து அதற்கும் பூசை செய்து அவற்றைக் கொண்டு போய் கடலில் விடுவார்கள். “கல்லு போட்டாச்சு” என்று தெரிவிப்பார்கள். அதன் பின்னர் அனைவரும் மீண்டும் குளித்துவிட்டு உண்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பர். அறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிக. இஃது ஓர் குறியீடு. இது நிற்க.
உண்மைப் பொருள்கள் மூன்று என்றோமே, அதாங்க, பதி, பசு. பாசம் அந்த மூன்றனுள் அந்தப் பாசமும் மூன்று வகையினில் வெளிப்படுமாம். அவற்றை ஆனவம், கன்மம், மாயை என்கிறார்கள்.
கன்மம் என்றால் வேறு ஒன்றுமில்லை. அவைதாம் கருமம் என்று சொல்லப்படுகின்ற செயல்கள் அல்லது வினைகள்.
மலத்தினுள் உயிர் சிக்குண்டுள்ளது. இந்த நிலைக்குப் பெயர் “கேவல நிலை”!
இங்கே, அங்கே என்று அதனால் நகர முடியவில்லை. வெறுப்பு பிறக்கிறது; வெளியேற வேண்டுமே என்னும் விருப்பு; ஆக விருப்பு – வெறுப்புத் தோன்றும். அஃதே மூல ஆனவ மல நிலை; அப்பொழுது ஏதாவது செய்ய வேண்டுமே என்று செயல் செய்ய நினைக்குமாம். இந்த நிலைக்குப் பெயர் மூல கன்ம மல நிலை.
அஃதாவது, ஆன்மா எவ்வாறு மெல்ல மெல்ல கீழிறங்கி இந்த உலகத்திற்குள் வரும் கதையைப் பார்க்கிறோம்.
ஒரு கதை போலக் கேளுங்கள். அவ்வளவே!
ஆனால், இறைவனோ விருப்பு வெறுப்பு அற்ற வித்தகன். அவன் நினைத்தால் அப்படியே அந்த ஆன்மாவைத் தூக்கிவிடலாமே என்றால் அவன் வரமாட்டான், வரமாட்டான், வரவேமாட்டான்!
ஆனால், இந்த நிலையைக் கண்டு இரங்கி ஒரு பாதையைப் போடுவான். ஆனால், பயணம் ஆன்மாவினுடையதே!
அந்தப் பாதையைத்தான் தத்துவங்களாகப் பார்க்கிறார்கள் சித்தாந்திகள்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments