24/01/2025, பகவத்கீதை, பகுதி 164
- mathvan
- Jan 24
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒரு செயலினைச் செய்துவிட்டு அது தவறாகப் போய்விட்டால் நாம் மனக்கலக்கம் அடைகிறோம். “நாம் மட்டும் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் அந்தத் தவறு நிகழ்ந்திருக்காது” என்று எண்ணி எண்ணி மனப்புழுக்கத்தால் அமைதி இழக்கின்றோம்.
அவ்வாறு, நம்மை நாமே குறை கண்டு (Self blame) குன்றிப் போக வேண்டாம் என்கிறார். தவறு என்பது தவறிச் செய்வது. அது மீண்டும் நிகழ்ந்தால்தான் அது தப்பு. தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்புகளைத் தவிர்க்க இயலும். தவிர்க்கவும் வேண்டும்.
“கொன்றாலும்” என்றால் கொல்வதற்கு உரிமை உண்டு என்று பொருள் எடுத்தால் சொல்ல வந்த கருத்து தவறாகிப் போகும்.
கடமைகளைச் செய்யும் பொழுது உயிர் வதை நிகழும் என்றால் அதுவும் சரியான செயலே என்கிறார். உயிர் வதை இல்லாப் போர் எது?
ஆனால், கடமைகள் என்னும் போர்வையில் கள்ளத்தனமாக அழித்தல் கூடாது! இந்த இனம் வாழ அந்த இனத்தை அழிப்பேன் என்பது கொடுமை!
என் கொள்கை இது. அதற்கான கடமை மற்றவரை அழிப்பது என்றால் அது குணக்கோளாறு!
“என் கொள்கை” என்றாலே அதன் செயல்கள் பற்றுடன் அமைந்துவிடும். பற்று என்றால் ஒரு பக்கம் சாய்தல் (bias). ஒரு பக்கமாகச் சாய்தல் என்பதனைத்தான் தவிர்க்க வேண்டும் என்கிறார். இந்தக் கருத்தில் கவனம் வைக்க வேண்டும்.
கீதையின் அடுத்த பாடலைப் பார்ப்போம்.
இந்தப் பாடலில் அறிவு முக்கோணம், செயல் முக்கோணங்களை அறிமுகப்படுத்துகிறார்.
அறிவு முக்கோணத்தின் பக்கங்களாக கருதப்படுவன: ஒரு செயலைக் குறித்த அறிவு (ஞானம்), அறியப்படும் பொருள் (ஞேயம்) மற்றும் அறிபவர் (ஞாதா). இவை ஒரு செயலைச் செய்யத் தூண்டுவன!
செயல் முக்கோனத்தின் பக்கங்களாகக் கருதப்படுவன: செயலைச் செய்பவர் (கர்தா), கருவிகள் (கரணங்கள்), செயல்பாடு (கர்மம்). இவை மூன்றும் செயலின் கூறுகள்.
பாடலைப் பார்ப்போம்.
செயலைக் குறித்த அறிவு (ஞானம்), அறியப்படும் பொருள் (ஞேயம்) மற்றும் அறிபவர் (ஞாதா) இவை மூன்றும் செயலைத் தூண்டும் அகக் காரணிகள் மூவகை; செயலைச் செய்பவர் (கர்த்தா), கருவிகள் (கரணங்கள்), செயல்பாடு (கர்மம்) என செயலைச் செய்ய புறக் காரணிகள் மூவகை. – 18:18
குணங்களின் பாகுபாடு குறித்துச் சாங்கிய கொள்கைகளில் சொல்லப்படும் சாத்விகம், இராசசம், தாமசம் என்னும் முக்குணங்களின் வழி அறிவு (ஞானம்), செயல் (கர்மம்), செயலைச் செய்பவர் (கர்த்தா) என்னும் மூன்றினையும் மூன்று விதமாய்ச் சொல்லப்படுகின்றன. அவற்றையும் உள்ளபடி சொல்கிறேன். (கேள்). – 18:19
வெவ்வேறாக உள்ள பொருள்கள் அனைத்திலும் வேறுபாடில்லாததும், அழிவில்லாததுமாக இருக்கும் இயல்பைக் காணும் அறிவே (ஞானமே) சாத்விக அறிவென்று அறி. – 18:20
அஃதாவது, வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காண்பது சாத்விக ஞானம்.
சகல உயிர்களிலும் தனித்தனியாக, வேறுபட்ட, வெவ்வேறான ஆன்மாக்களை எந்த அறிவு உனர்கின்றதோ அஃது இராசச அறிவு என்று உணர். – 18:21
அஃதாவது, ஒற்றுமையைத் தவிர்த்து வேற்றுமையைக் காண்பது இராசச ஞானம்.
காண்பதையே அனைத்தும் என்று எண்ணுவதும், காரணங்களைக் காணாமல் காரியங்களே அனைத்தும் என்று எண்ணுவதும், உள்ளத்தை அறியாமல் உடலே அனைத்தும் என்று எண்ணுவதும், குறியீடுகளான சிலைகளே தெய்வம் என்று நினைத்தலும் என புத்திக்கு ஒவ்வாததாய், உண்மைக்குப் புறம்பானாதாய் எந்த அறிவு செயல்படுகின்றதோ அந்த அறிவு தாமசம் எனக் கூறப்பட்டுள்ளது. – 18:22
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments