25/01/2025, பகவத்கீதை, பகுதி 165
- mathvan
- Jan 25
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
அறிவினை (ஞானம்) முக்குணங்களின் வழி மூன்று பாடல்கள் (18:20. 18:21. 18:22) மூலம் தெரிவித்தார்.
அடுத்துவரும் மூன்று பாடல்கள் மூலம் செயல்களைக் குணங்களின்வழி விளக்குகிறார்.
(தமக்கு) வரப்போகும் பயன்களில் ஆசையில்லாமலும், பற்று இல்லாமலும் விதிக்கப்பட்ட செயல்களை விருப்பு வெறுப்பின்றிச் செய்யப்பட்டதோ அச்செயல்கள் சாத்விகம் என்று சொல்லப்படும். – 18:23
அஃதாவது, பற்றில்லாமல் செய்யப்படும் செயல்கள் சாத்விகம்.
(தமக்கு) கிடைக்கவிருக்கும் இலாபங்களால் தூண்டப்பட்டு, அகங்கார போதையுடன், கடும் முறைகளைக் கையாண்டு எச்செயல்கள் செய்யப்படுகின்றன்வோ அச்செயல்கள் இராசசம் எனக் கூறப்படும். – 18:24
அஃதாவது, தம் நலமே முக்கியம் என்று செய்யப்படும் செயல்கள் இராசசம்.
இலாபத்தையோ, நட்டத்தையோ, தமக்கோ பிறர்க்கோ விளையப் போகும் இன்பத்தையோ, துன்பத்தையோ, தம்மால் இக்காரியத்தினைச் செய்ய இயலுமா இயலாதா என்றெல்லாம் சிந்தியாமல், மதி மயக்கத்தினால் எச்செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றதோ அச்செயல்கள் தாமசம் எனப்படும். – 18:25
அஃதாவது, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யப்படும் செயல்கள் தாமசம்.
அடுத்து வரும் மூன்று பாடல்களிலின் மூலம் செயல் செய்பவனை (கர்த்தா) முக்குணங்களின் வழி பகுக்கிறார்.
பற்று நீங்கியவனும், “நான்” என்னும் சிந்தனை இல்லாதவனும், விடாமுயற்சியையும், ஊக்கத்தையும் கைவிடாதவனும், வெற்றி தோல்வியால் மயங்காதவனும் ஆகிய தொழில் செய்வோன் (கர்த்தா) சாத்விகன் என்று சொல்லப்படுவான். – 18:26
ஆசை வயப்பட்டவனும், செயலின் பயன் மீது குறியாக இருப்பவனும், பிறர்க்கு ஒன்று கொடுக்க மனமில்லாதவனும், பிறரிடம் கடுமையாக நடந்து கொள்பவனும், உள்ளத்தில் தூய்மையற்றவனும், இன்பத்தில் துள்ளலும் துன்பத்தில் துவண்டு போகும் மனத்தையுடையவனும் ஆகிய தொழில் செய்வோன் (கர்த்தா) இராசசன் என்று வழங்கப்படுகிறான். – 18:27
அலைபாயும் மனத்தினனும், நல்லொழுக்கம் இல்லாதவனும், பணிவென்பது அறியாதவனும், வஞ்சகனும், தீயச் செயல்களைச் செய்ய முயல்பவனும், சோம்பேறியும், தன் மீது நம்பிக்கையற்றவனும், எந்தச் செயலையும் நீட்டிக் கொண்டே இருப்பவனுமாகிய தொழில் செய்வோன் (கர்த்தா) தாமசன் என்று சொல்லப்படுவான். – 18:28
அர்ஜுனா, முக்குணங்களுக்குத் தகுந்தாற்போல மனிதர்களின் புத்தியும் உறுதியும் மூவகைப்படும். அவற்றை முழுமையாகச் சொல்கிறேன் கேள். – 18:29
அர்ஜுனா, செயலை எவ்வாறு தொடங்குவது, தொடங்கிய அச்செயலை எவ்வாறு முடிவிற்குக் கொண்டு வருவது, செயத்தக்க செயல்கள் எவை, செயத்தாகதன எவை, எந்தச் செயலுக்கு அஞ்சிட வேண்டும், எதற்கு பயம் என்பது இருக்கக் கூடாது, (செயல்களைப்) பற்றில்லாமல் செய்கிறோமா என்ற சுய அலசலும், மன அமைதியே குறிக்கோள் என்பதனையும் அறியும் அந்தப் புத்தி சாத்விக புத்தியெனப்படும். – 18:30
அர்ஜுனா, செயல்களில் நல்லன எவை, தீயன எவை என்னும் மாறுபாடு அறியாமலும், செயத்தக்க செயல்கள் எவை, செயத்தாகதன எவை என்னும் செயல்களில் குழப்பமும், உண்மை ஒன்றாக இருக்க அதற்கு மாறாக வேறொன்றைத் தேர்ந்தெடுப்பதுமாக அமைந்த புத்தி இராசசப் புத்தியெனப்படும். – 18:31
அஃதாவது, ஏடாகூடமாகச் செய்ய வைக்கும் புத்தி இராசசப் புத்தி! இந்தப் புத்தியில் ஒரு குழப்பம் இருக்கும்.
அர்ஜுனா, அறியாமையால் சூழப்பட்டு, நல்ல செயல்களைத் தீய செயல்கள் என்றும், தீயவற்றை நல்லன போல எண்ணுவதும், அவ்வாறே, அனைத்து செயல்களையும் செய்யத் தூண்டும் புத்தி எதுவோ அது தாமசப் புத்தியெனப்படும். – 18:32
அடுத்துவரும் மூன்று பாடல்களின் மூலம் உறுதியினை முக்குணங்களின் வழிப் பிரிக்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments