25/10/2024, பகவத்கீதை, பகுதி 70
- mathvan
- Oct 25, 2024
- 2 min read
Updated: Jan 13
அன்பிற்கினியவர்களுக்கு:
நாம் முன்னர் சாங்கிய யோகம் என்னும் அத்தியாயத்தைச் சிந்திக்கும் பொழுது சாங்கியமும் யோகமும் ஒன்றே என்று பரமாத்மா பின்னர் சொல்லுவார் என்று பார்த்தோம். காண்க https://foxly.link/பகவத்கீதை_பகுதி_52. அவற்றைச் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
சாங்கியம் என்றால் அறிவின் தேடல்; தெளிவு பெறுதல்; யோகம் என்றால் நிட்டை கூடுதல். அஃதாவது, அந்த அறிவினில் பொருந்தி நிற்றல். இவை இரண்டுமே படி நிலைகள்தாம்! அஃதாவது, ஞான முயற்சியின் படி நிலைகள்!
ஞான முயற்சி என்பது நான்கு படி நிலைகளைக் கொண்டது என்றும் சிந்தித்து உள்ளோம். அஃதாவது: கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல். காண்க https://foxly.link/பகவத்கீதை_பகுதி_8; https://foxly.link/easythirukkural_ஞானம்1
அஃதாவது சாங்கியமும் யோகமும் சேர்ந்தே செல்லும்!
நம் வள்ளுவப் பேராசான் மிகவும் எளிதாக ஞான முயற்சிக்குச் சொல்லும் குறள் ஒன்று உண்டு. நமக்கெல்லாம் தெரிந்த குறள்தான்!
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. – 391; - கல்வி
கற்க – அறிவின் ஆரம்பப் படிநிலை; நிற்க (யோகம்) – நிட்டை கூடி நிற்கும் இறுதிப் படிநிலை
இவ்வளவுதான் சாங்கியமும் யோகமும்!
படிக்கும் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும் பொழுது பெரும்பாலும் இரு கருத்துகளைச் சொல்லுவோம்.
ஒன்று: பிடிச்சதைப் படிங்க; புரிஞ்சி படிங்க என்போம்!
ஆனால், இவை சரியான கருத்துகளா?
பிடிச்சதைப் படிங்க என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம்!
எனக்குப் படிக்கவே பிடிக்கவில்லை என்றால்? அப்படியே விட்டுவிடலாமா?
இல்லை, இல்லை அப்படியெல்லாம்விடக் கூடாது என்போம்!
சரி என்ன செய்யணும் என்று கேட்டால் ஏதாவது ஒன்றைப் படித்தே ஆக வேண்டும் என்போம்.
ஏதாவது ஒன்று என்றால்?
மீண்டும் உனக்கு எது பிடிக்கிறதோ அது என்போம்!
எது படிக்க எளிதாக இருக்கிறதோ அதனைப் படிக்கலாமா என்றால் அதனைப் படித்தால் வேலை கிடைக்காது என்போம்!
வேலை கிடைக்க என்ன படிக்கணும் என்றால்?
ஒரு பட்டியலைக் கொடுப்போம்! அதில் எதுவுமே பிடிக்கவில்லை என்றால்!
இல்லை, இல்லை உனக்குத் தெரியாது. அடுத்த வீட்டு வீரராகவன் அதனைப் படித்து ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கிறான், நீ அதனைப் படி என்போம்!
பிடித்தைப் படி என்று ஆரம்பித்து நாம் பிள்ளைகளைக் கொண்டு செல்லும் வழி இதுதான்!
சரி, என்ன செய்யலாம் என்கிறீர்களா? நாம் பிள்ளைகள் தொடக்க் கல்வி (Formative years) வகுப்புகளைப் படிக்கும் பொழுதிலிருந்து சொல்ல வேண்டியது – எதனைப் படித்தாலும் அதனை நன்றாகப் படித்துக் கொள், பிடித்துக் கொள். இதுதான் முக்கியம்.
எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்பார் நம் வள்ளுவப் பேராசான். இஃது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்து. இது வாழ்க்கைக்கு உதவுமா என்ற கேள்வியை எழுப்பிப் பலர் கற்கும் பருவத்திலேயே அறிவின் பரிமாணம் என்னவென்று தெரியாமல் அழித்துவிடுகின்றனர்.
அடுத்த கருத்து – புரிந்து படியுங்கள் என்பது!
படித்துதான் புரிந்து கொள்ள முடியுமே தவிர புரிந்து கொண்டு படிக்க இயலாது. ஒரு குறளைப் படிக்கிறோம். படித்தபின் அதனைப் பதம் பிரித்துப் புரிந்து கொள்கிறோம். இதுதான் கற்கும் முறை.
சரி, அப்பொழுது நாம் சொல்ல வேண்டியவை எவை:
படிப்பதைப் பிடித்துக் கொள்ளுங்கள்; படித்ததைப் புரிந்து கொள்ளுங்கள்.
இஃது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உயர்வு நிச்சயம்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments