26/01/2025, பகவத்கீதை, பகுதி 166
- mathvan
- Jan 26
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பார்த்தா, எந்தத் திடத்தால் (உறுதி) மனமும், மூச்சும், புலன்களும் எப்பொழுதும் நடுவுநிலையில் பிறழாமல் காக்கப்படுகின்றதோ அந்த உறுதி சாத்விக உறுதியென அறி. – 18:33
பார்த்தா, அறம், பொருள், இன்பமென்னும் (இல்லறத்தின்) மூன்று பிரிவுகளில் நிகழும் செயல்களில், ஆழ்ந்த பற்றுதலுக்கும் மேலும் விளையப் போகும் பயன்களில் அதீத நாட்டத்திற்கும் அடித்தளமாக அமையும் உறுதி இராசச உறுதியாம். – 18:34
பார்த்தா, மதி மயக்கத்தினால் (துர்மேதாஹா) ஒருவன் தன் நிலை மறந்து (ஸ்வப்னம்), அச்சத்திலிருந்தும், துயரத்திலிருந்தும், மனக் குழப்பத்திலிருந்தும், பித்துப் பிடித்த நிலையில் இருந்தும் விடுபடாமல், அவற்றிலேயே உழன்று கொண்டிருக்கும் உறுதி தாமச உறுதியைச் சார்ந்தது. – 18:35
அடுத்து வரும் பாடல்களில், சுகத்தினை (இன்பத்தினை) முக்குணங்களின் வழி பகுக்கிறார்.
அர்ஜுனா, இப்பொழுது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எந்தச் செயல்கள் பழகப் பழக மனம் அமைதியடைகின்றதோ, எதனில் துன்பங்கள் மறைகின்றனவோ, எவை முதலில் (நஞ்சினைப் போலக்) கசந்தும் பின்னர் அமிர்தத்தைப் போல இனிமையாக, உள்ளுக்குள் நிலை பெற்ற புத்தியின் தெளிவில், தோன்றுகின்றதோ அந்த இன்பம் சாத்விக இன்பமெனப்படும். – 18:36-37
புலன்களின் நுகர்ச்சிக் கூர்மையால் எவ்வின்பம் முதலில் அமிர்தம் போன்று இன்பத்தைத் தந்து முடிவினில் நஞ்சினைப் போலத் துன்பத்தைத் தருகின்றதோ அந்த இன்பம் இராசச இன்பம் எனக் கூறப்படும். – 18:38
(அறிவின் தடுமாற்றத்தினால்) உறக்கம், சோம்பல், அசட்டை உள்ளிட்டவைகளால் உண்டாகும் இன்பமானது எப்பொழுதும், அஃதாவது, முதலில் இருந்து முடிவு வரை மயக்கத்தினில் ஆழ்த்தும் அந்தச் சுகம் தாமசச் சுகமெனப்படும். – 18:39
இயற்கையினின்று தோன்றும் இந்த முக்குணங்களின் பிடியில் இருந்து மொத்தமாய் விடுபட்டவன் இவ்வுலகத்திலோ அல்லது வேறு எந்த உலகங்களிலோ இருப்பதற்கு வாய்ப்பில்லை. – 18:40
(எனவே, எப்பொழுதும், குணங்களைச் செம்மைபடுத்திக் கொண்டே இருப்பது நலம் என்கிறார்.)
பரந்தபா! குணங்கள் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன; அவரவர் தத்தம் இச்சைக்கேற்ற குணங்களைக் கொண்டால் தொழில்களும் அவ்வாறே அமையும். அவ்வகையினில் ஏற்படும் தொழில் பிரிவுகளே பிராமனர், சத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர். – 18:41
(குணங்களினால் தொழில் பிரிவுகள் அமைகின்றன என்றும் அத்தொழிற்பிரிவுகளும், பெரும்பான்மை கருதி, நான்கு வகை (வர்ணம்) என்றும் இந்தப் பாடல் தெரிவிக்கின்றது. இந்தப் பாடல் மூலம், தொழில்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகின்றன என்று பொருள் சொல்ல இயலுமா என்றால் இயலாது. பின்னாளில், உரையாசிரியர்களின் கருத்துகளால், மூலப் பாடலின் கருத்தில் விகாரம் தோன்றியிருக்கலாம்.)
நாளை இந்தப் பாடலுக்கான சுவாமி முகுந்தானந்தா அவர்களின் உரையையும் அவரின் விரிவான கருத்துகளையும் பார்ப்போம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Commenti