26/12/2024, பகவத்கீதை, பகுதி 132
- mathvan
- Dec 26, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
வகுப்பு எடுக்க வேண்டும் என்றால் வகுப்பறைக்குள் மாணவர்கள் வர வேண்டும். அது மட்டும் போதுமா என்றால் போதாது ஆசிரியரும் வர வேண்டும் அல்லவா, அது போல இந்த மாயையினுள் இறைவனும் இரங்கி இறங்கி வருவானாம்.
மாயையும் மூன்றாகப் பிரிக்கிறார்கள். அவையாவன: சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை.
இப்பொழுது நாம் இந்த பிரகிருதி மாயையில் இருப்போமாம். ஆண்டவன் இறங்கி சுத்த மாயைக்குள் நுழைவானாம்.
இது எதற்கு என்றால் நாம் அவனையும் பிடித்து உள்ளே இழுத்துவிடக் கூடாதல்லவா? அதற்காக அவனை உறுதிப் படுத்திக் கொண்டு கொஞ்சம்தான் இறங்குவான்.
இஃது ஏதோ மூன்று தனிப்பகுதிகளா என்றால் இல்லை. குன்றிமணியில் ஒரு பக்கம் கருப்பும் மறு புறத்தில் சிகப்பும் இருப்பது போல இருக்குமாம்.
கடவுளுக்கும் இயல்பு நிலைகள் இரண்டாம். ஒன்று சொரூப நிலை, மற்றொன்று தடத்த நிலை.
சொரூப நிலை என்பது குணம் குறிகளற்று இருப்பான். அவனுக்கு எந்தப் பெயரும் கிடையாது.
தடத்த நிலையில் ஐந்து தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றுக்கு காரணமாக எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற பெயர்களோடு இருப்பானாம்.
மக்கள் வணங்கும் கடவுள் தடத்த இலக்கணத்தோடு இருப்பவன். அந்தத் தடத்த நிலைகளும் மூன்று. அவை: அருவம், அரு உருவம். உருவம்.
சொரூப நிலை சைவ சித்தாந்திகளின் முடிவு. இந்த நிலையில் எந்த வடிவத்திலிருப்பான் என்றால் புத்திக்கு எட்டா வடிவத்தில் இருப்பானாம். அவன் அறிவிற்கு அகப்படாத ஒன்று என்றார்கள். பேரறிவு என்றார்கள். அவனுக்குப் பெயர் இல்லாக் காரணத்தினால் அவனை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது அவனைத்தான் குறிக்கும் என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
நம் சிற்றறிவிற்கு எட்டி விட்டால் அவனின் இலக்கணம் பிழையாகப் போய்விடுமாம். எல்லா இரகசியங்களும் நமக்குப் புலப்பட்டுவிட்டால் நாமும் காற்றுடன் கலந்து போவோமாம்! இந்தக் கருத்தின் அடிப்படையில் திரைப்படங்களும் வந்துள்ளன.
சுத்த மாயை என்றோம் அல்லவா அங்கே இருப்பவன் சுத்த சிவன். அந்த நிலையில் ஐந்து தத்துவங்கள் தோன்றும். முதல் தத்துவம் நாதத் தத்துவம்.
கொஞ்சம் விரைவாகச் சொல்லிப் போகிறேன்.
நாதத்தைத் தொடர்ந்து பிந்து, சதாசிவம், ஈசுவரம், சுத்த வித்தை என்று மொத்தம் ஐந்து. இறைவன் இப்பொழுது இறங்கிவிட்டான்!
அடுத்து அசுத்த மாயையில் ஏழு தத்துவங்கள் தோன்றும். இதில் மாயையின் ஒரு பகுதி (1), ஆன்மா இயங்க காலம் (2), நியதி (3), கலை (4), வித்தை (ஞானம்) (5), அராகம் (இச்சை அல்லது ஆசை) (6), புருடன் (7).
சுருக்கமாக, நான் விளங்கிக் கொண்டாற் போல் உங்களுக்கு:
வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்துவிட்டார். அஃதாவது சிவ தத்துவத்தின் ஐந்து படி நிலைகளைக் கடந்து வந்துவிட்டார். அடுத்து இருளில் இருக்கும் அந்த மாணவர்களை விழிக்கச் செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு மேடை அமைப்பார்; அதுதான் மாயை. அந்த மேடையில் எவ்வளவு காலம் இருந்து செயல் ஆற்ற வேண்டும் என்று முடிவு செய்வார். அதுதான் காலம்.
பின்னர் எவற்றினைச் செய்ய வேண்டும் என்ற நியதியை வரைவார். அதுதான் நியதி; பின்னர் செயல்களைக் கூட்டுவார். அதுதான் கலை; பின்னர் அதற்கு உரிய அறிவினைக் கூட்டுவார். அதுதான் வித்தை;
அடுத்து கொஞ்சம் ஆசையைத் தூண்டுவார். அதற்குப் பெயர் அராகம். இப்பொழுது ஆன்மாவிற்கு ஒரு வடிவம் வந்துவிட்டது. இதற்குப் பெயர் புருடன். புருஷன் என்பார்கள் வட மொழியில்!
புருடன் என்பது கண்ணுக்குத் தெரியா உருவம். அஃதாவது சூக்கும வடிவம்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments