27/08/2024, பகவத்கீதை, பகுதி 13
- mathvan
- Aug 27, 2024
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பகவத்கீதையில் உள்ள 700 பாடலுக்கும் பதம் பிரித்துப் பொருள் காண்பது ஒரு நீண்ட நெடிய பயணம். ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் சுருக்கமாக ஒரு அறிமுகம் போல நமது தொடரை வைத்துக் கொண்டு அதற்குத் தொடர்புடைய செய்திகளைப் பார்ப்போம்.
அறிஞர் பெருமக்கள் பலர் மிக அழகாக எளிமையான நேரடியான உரைகளைத் தமிழில் வழங்கியுள்ளனர். மகாகவி பாரதியார், மூதறிஞர் ராஜாஜி, கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டவர்களின் உரைகள் குறிப்பிடத்தக்கன. அதே போன்று சமஸ்கிருத நாட்டமுள்ளவர்கள் வாசிக்க ஆசாரியார் அண்ணா அவர்களின் தமிழ் உரையைப் படிக்கலாம் (ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்தின் வெளியீடு).
முழுவதும் சுவைக்க விரும்புவோர் அந்தப் பரம்பொருளை வணங்கி நேரடியாக அணுகுவதே சரி.
ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே. – சூத்திரம் 54, நன்னூல்
பாயிரம் என்பது நூலுக்கு ஓர் அறிமுக உரை. இஃது அந்த நூல் யாரால் யாருக்காக எப்பொழுது இயற்றப்பட்து உள்ளிட்ட பல செய்திகளைத் தரும்.
அதுபோன்று பகவத்கீதையில் பாயிரம் என்று தனியாகப் பாடல்கள் ஏதுமில்லை. உரைநடையிலேயே தொடங்குகிறது. அந்த உரைநடையில் இதைச் சொல்பவர் யார், கேட்பவர் யார், எங்கு, எதற்காக என்பதெல்லாம் முதலாம் அத்தியாயத்தில் விளங்கிக் கொள்ளமுடிகிறது. எனவே, முதல் அத்தியாயம் பகவத்கிதைக்குப் பாயிரம் என்றும் கொள்ளலாம்.
எந்த நூலிலும் இல்லாத ஒன்று இந்த நூலில் உள்ளது. அஃது என்னவென்றால் யாருக்கெல்லாம் இந்த நூலினைச் சொல்லக்கூடாது என்பதுதான்! அந்தப் பாடல் வரும் பொழுது அதனைக் குறித்துச் சிந்திப்போம்.
கீதையில் மொத்தம் 18 அத்தியாயங்கள். 18 என்பதிலேயே இரகசியங்கள் இருக்கலாம். எண் 8 ஐக் கிடத்தினால் ∞ முடிவிலியைக் குறிக்கும்.
எண் 18 என்பது 1 இல் ஆரம்பித்து முடிவிலியைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.
ஆனால், எண் 18 என்பதைத் தொடர்ச்சியாகப் பல நிகழ்வுகளில் பயன்படுத்தியுள்ளனர். 18 என்பது ஒரு முக்கியமான கூறியீடு.
தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள்;
இராமாயணப் போர் பதினெட்டு மாதங்கள்;
பாரதப் போர் பதினெட்டு நாள்கள்;
இமயம் சென்று செங்குட்டுவன் நிகழ்த்திய போர் பதினெட்டு நாழிகை – என்று செங்குட்டுவன் முழக்கமிட்டானாம்!
தற்காலத்தில், நம் மனத்துக்குள் பதினெட்டு நொடிக்குள்ளாகவே எத்தனை எத்தனைப் போராட்டங்கள்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments