27/10/2024, பகவத்கீதை, பகுதி 72
- mathvan
- Oct 27, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
மனனம் செய்வது (டப்பா அடிப்பது) ஏதோ ஒரு குற்றம் போல சித்தரிக்கப்பட்டுவிட்டது. தம் துறைசார் சூத்திரங்களை மனனம் செய்வோர்தாம் உயர்கிறார்கள்.
சிறந்த பேச்சாளர்கள் அனைவருமே மனப்பாடம் செய்கிறார்கள். அவர்கள் மட்டுமன்று! பொறியாளர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள், வழக்குரைஞர்கள், கணக்காளர்கள் இப்படி எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் உள்ள சூத்திரங்கள் அனைத்தும் அத்துப்படியாக இருக்கவேண்டும். இதுதான் பாலபாடம். இந்தச் சூத்திரங்கள்தாம் (விதிகள்) ஐயமின்றி ஆழம் சென்று ஆராய உதவும். இல்லையென்றால் ஒவ்வொருமுறையும் சந்தேகம் வர அடிப்படை புரியாமல் விழித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
நம் ஔவையார் பெருந்தகையைக் கேட்டால்: … வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் என்பார்!
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.” --- ஒளவையார் தனிப்பாடல்கள்
நம் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். மனனம் செய்வது மிக அவசியம். மனனம் செய்ததைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பழகுவது நீண்டகாலம் நினைவில் இறுத்த ஒரே வழி!
அறிவுசார் பொருளாதரத்திற்குச் சிறு வயதினில் செய்யும் மனப்பாடப் பயிற்சிதான் வழிவகுக்கும். இந்த முறை நம்மை விட்டு விலகிவிட்டதனால் நம்மிடமிருந்து படைப்புகள் தோன்றுவதும் மறைந்துவிட்டது. போதாத குறைக்கு இப்பொழுது கூகுளாண்டவர் (Google) வேறு உள்ளார். அவரைக் கேட்டால் போதும் என்ற மனநிலைக்கு நம்மை மாற்றிவிட்டார்கள். படிக்கும் பழக்கம் வழக்கொழிந்துவிட்து. அதனிலும், புத்தகங்களைத் திறந்து படிக்கும் பழக்கம் சிதைந்துவிட்டது.
என்ன பகவத்கீதை என்று சொல்லிவிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்கலாம். இல்லை, இதுதான் சாங்கியம்!
ஒரு காலத்தில், அஃதாவது, ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்னர் மாயன் என்ற இனத்தவர் இருந்தார்கள். மாயா நாகரிகம் என்ற ஒரு நாகரிகம் இருந்தது.
தற்போதைய மெக்சிகோ (Mexico), குவாத்தமாலா (Guatemala), ஒண்டூராசு (Honduras) போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. அந்தக் காலத்திலேயே முழு வளர்ச்சிபெற்ற எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். ஆனால், அந்த நாகரிகம் அழிந்துவிட்டது. தெளிவான காரணங்களை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.
பின் வந்த சந்ததியினரின் கற்கும் முறைகளில் மாற்றமும், மூட நம்பிக்கைக்களின் மேல் மிகுந்த நாட்டமும், முறைதவறிய விவசாயம் உள்ளிட்டவை காரணிகளாக இருக்கலாம் என்கிறார்கள்.
அழிவிற்கு ஆட்பட்டது மாயன் நாகரிகம் மட்டுமன்று. வேறு பல நாகரிகங்களும் அவ்வாறே. தமிழர் நாகரிகமும் அவ்வாறே. மகாகவி பாரதி அறிவு வரிசையைப் பட்டியலிடும்போது:
… யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை --- தமிழ்; மகாகவி பாரதி
இந்த மூவரோடு நிறுத்திவிட்டார்! நம் மரபு தடைபட காரணம் என்ன?
இவ்வாறு பல துறைகளைக் காட்டலாம். எடுத்துக்காட்டாகக் கட்டடக் கலை, சிற்பக்கலை. உலோகங்களை உருக்கிப் பொருள்கள் செய்யும் முறை உள்ளிட்ட பல அறிவுத்துறைகள் மறைந்துவிட்டன. காரணம் என்ன?
விடை மிக எளிது! அந்த அறிவு கடத்தப்படவில்லை. அந்த அறிவினை பின்வரும் தலைமுறைகள் மனப்பதிவினில் ஏற்றவில்லை! மனப்பதிவினில் ஏற்ற ஏற்றதான் அவை பல்கிப் பெருகும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments