top of page
Search

28/01/2025, பகவத்கீதை, பகுதி 168

  • mathvan
  • Jan 28
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

பெரும்பான்மை கருதித் தொழில்களைப் பிரிக்கும் பொழுது, மற்றவர்களை வழி நடத்தும் கடமையுள்ளவர்கள், வழிகாட்டிகள், தலைமைப் பொறுப்பில் உள்ளோர், அறிவினைப் புகட்டுவோர் உள்ளிட்டோர் முதல் பகுப்பினில் இருத்தல் வேண்டும். இந்தப் பகுப்பின் குறியீடாகப் பிராமணர் என்ற சொல் இருந்திருக்க வேண்டும்.


பிராமணர்களின் கடமைகளாவன: நடுவு நிலைமை (சமஹ), சுயக் கட்டுப்பாடு (தமஹ), விடா முயற்சி (தபஹ), மனத் தூய்மை (சௌசம்), பொறுமை (க்ஷாந்தி), நேர்மை (ஆர்ஜவம்), மேலும், ஆழ்ந்த அறிவு (ஞானம்), பட்டறிவு (விஞ்ஞானம்), மரபினை மதித்தல் (ஆஸ்திக்யம்) உள்ளிட்டவைகளாகும். – 18:42


சத்திரியர்களின் கடமைகளாவன: திண்மை (சௌர்யம்), வலிமை (தேஜஹ), உறுதி (த்ரிதிஹி), போர்க் கருவிகளைத் திறம்பட கையாளும் தன்மை (தாக்ஷ்யம் யுத்தே), மற்றும் எடுத்த செயலை முடிக்கும் உறுதி (அபலாயனம்), பிறர்க்குரிய பங்கினைச் சரிவர அளிப்பது (தானம்), தலைமையேற்று நடக்கும் இயல்பு (ஈஸ்வர பாவஹ) உள்ளிட்டவைகளாகும். – 18:43


வைசியர்களின் கடமைகளாவன: பயிர்த் தொழில், பால் பண்ணை மற்றும் வணிகம் உள்ளிட்டவைகளாகும். சூத்திரர்களின் கடமைகளாவன: மக்களுக்குத் தேவையான சேவைகளை அளிப்பன உள்ளிட்டவைகளாகும். – 18:44


ஒவ்வொருவரும் தங்கள் (இயல்புகளுக்கு ஏற்றவாறு தொழில்களை அமைத்துக் கொண்டு அதற்குரிய) கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருந்தால் அவர்கள் மன அமைதி பெறுகிறார்கள். தனக்குரிய கடமைகளில் இருந்து வழுவாதவன் எங்கனம் மன அமைதி பெறுகிறான் என்பதனைச் சொல்கிறேன், கேள். – 18:45


அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நிற்பது எதுவோ. எதனில் இருந்து பொருள்களெல்லாம் தோன்றுகின்றனவோ, அந்த இயற்கையுடன் இயைந்து, தமக்குரிய கடமைகளைச் செய்பவன் மன அமைதி அடைகிறான். – 18:46


ஆகையினால், பிற உயிர்களைப் பார்த்துத் தாமும் அதே போன்று செயலாற்றுவோம் என்று தம் இயல்பிற்கு மாறாக செய்வதனைக் காட்டிலும், தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைத் தம் இயல்பிற்கு ஏற்றார் போல், இயற்கையுடன் இயைந்து செய்வதில் ஒரு குறையுமில்லை. அதனால் எந்தத் தாழ்வும் இல்லை. அது மட்டுமன்று, அஃது உயர்விற்கே வழி வகுக்கும். – 18:47


ஒளவைப் பெருந்தகை என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் — தானும்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி! – பாடல் 14, மூதுரை, ஓளவைப் பெருந்தகை.

 

வான்கோழி மயிலாகாது; மீன்கள் மரம் ஏறா! எல்லாத் தொழில்களும் உயரிய மதிக்கத்தக்க தொழில்களே! என்கிறார்.

 

ஒன்று, உயர்வு; ஒன்று இகழ்ச்சி என்பது குணக்கோளாறு என்கிறார்.

 

இது நிற்க. நாம் அடுத்த பாடலுக்குச் செல்வோம்.

 

குந்தி மகனே, இயல்பிற்கு ஏற்ற தொழில்கள் (மன மயக்கத்தால்) உயர்வாகத் தோன்றாவிடினும் அவற்றைக் கைவிடலாகா. எப்படி ஒளியை வழங்கும் நெருப்பும் புகையினால் சூழப்பட்டுள்ளதோ அவ்வாறு ஒவ்வொரு தொழிலிலும் சில குறைகளும் சேர்ந்தே நிற்கின்றன. – 18:48

 

எப்பொழுதும் பற்றற்ற புத்தியுடனும், புலன்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து வெற்றிக் கண்டவனும், விருப்பு (வெறுப்புகளைக்) கடந்தவனும் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்பவன் எவனோ அவனே இல்லறத் துறவி. அந்த துறவின் மூலம் அவன் மனம் அமைதி பெறுகின்றது. – 18:49

 

வள்ளுவர் பெருமான்  சொல்வதனையும் பார்க்கலாம்! காண்க https://foxly.link/easythirukkural_குறள்_266.


விதித்தன செய்வார் தவம் செய்வாராவார்; பலர் அவ்வாறு அல்லாமல் ஆசைகளுக்குள் அகப்பட்டு வீண் முயற்சிகள் செய்து காலம் இழப்பார்.


தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. – 266; - தவம்


 நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.



ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page