28/08/2024, பகவத்கீதை, பகுதி 14
- mathvan
- Aug 28, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு யோகம் என்று குறிக்கிறார்கள். யோக் (Yog) என்ற சொல் யுஜ் என்ற மூலத்திலிருந்து வருகிறது. யுஜ் (yuj) என்றால் ஒன்றுபடல் (to unite), சேர்ந்து இருத்தல் (to join).
இங்கே யோகம் என்றால் அந்தப் பொருளைக் குறித்துச் சிந்தித்தல் என்று பொருள்படும்.
உதாரணத்திற்கு முதல் அத்தியாயம் அர்ஜுன விஷாத யோகம் என்று வழங்குகிறார்கள். விஷாதம் என்றால் பெருங்குழப்பம்.
அர்ஜுன விஷாத யோகம் என்றால் அர்ஜுனனின் குழப்பங்களைக் குறித்துச் சொல்வது இந்தப் பகுதி என்று பொருள்படும்.
போருக்குக் குறித்த நாளும் வந்தது. அர்ஜுனனுக்குப் பரமாத்மா சாரதியாக, அஃதாவது இயக்குநராக, செலுத்துநராக வருகிறார்.
அவர் செலுத்த அவன் இயங்குகிறான். ஆனால், பார்வைக்கு அவனுக்கு அவர் ஓட்டுநர் (Driver).
கண்ணா, என் தேரைச் செலுத்து. இரு படைகளுக்கும் இடையில் சென்று நிறுத்து. என் கைகளால் மண்மூடிப் போகப்போகும் அவர்களைக் காண வேண்டும் என்கிறான்.
கண்ணனும், ஆகா, இப்படியல்லவா ஒரு போர் வீரன் இருக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே “அப்படியே ஆகட்டும்” என்கிறார் அவர்.
அவன் நன்றாகக் காணும் வகையினில் தேரை எதிரிப் படைகளுக்கு முன்னர் நிறுத்துகிறார்.
ஆங்கே பார்த்தால் அவனின் தந்தையைப் போன்றவர்கள், மாமன் கள், மைத்துனர்கள், அண்ணன்கள், தம்பிகள், அனைத்து வித்தைகளைக் கற்றுக் கொடுத்த ஆசிரியப் பெருமக்கள், தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த பீஷ்மர் பெருந்தகை …
காண்கிறான். அவனுள் பாச அலை பெருக்கெடுக்கிறது; தலை சுழல்கிறது; கண்கள் கலங்குகின்றன; இவர்களையா நான் வீழ்த்த வேண்டும் …?
வீழ்த்தி என்ன செய்ய?
போரின் முடிவு எப்பொழுதும் அழிவுதானே. இதனால் பயன் என்ன?
இவர்களை அழித்தபின் நான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க இயலுமா?
இந்தக் கேள்விகள் போரில் வெற்றி பெற்றபின் ஏற்பட்து அசோகருக்கு, ஞானம் பெற்றார்.
ஆனால், நம் அர்ஜுனனுக்கு ஆரம்பத்திலேயே அந்தக் குழப்பம் வந்துவிடுகிறது. ஞானம் வரவில்லை!
எதிரிலே பதினோரு அக்ரோணி சேனைகள்; இவன் பக்கத்தில் 7 அக்ரோணி சேனைகள். மொத்தம் 18 அக்ரோணி சேனைகள். ஆக மொத்தம் இங்கேயும் 18.
அக்ரோணி என்பது அணிவகுப்பின் எண்ணிக்கை. ஒரு அக்ரோணியில் 21870 தேர், 21870 யானை, 65610 குதிரை, 109350 படை வீரர் உள்ளடக்கியது. எந்த எண்ணைக் கூட்டினாலும் 18. 2+1+8+7+0 = 18!
மகாபாரதத்தின் ஆசிரியருக்குப் பிடித்த எண் பதினெட்டா? இது நிற்க.
அவனுக்குப் பந்த பாசம் கண்ணை மறைக்கிறது. காண்டீபம் (வில்) கையைவிட்டு நழுவுகிறது. அப்படியே அமர்ந்துவிடுகிறான்.
கண்ணா என் மனம் அமைதியை விரும்புகிறது என்கிறான்!
அவருக்கு மீண்டும் சிரிப்பு!
என்ன அர்ஜுனா, என்னமோ அவர்களை அழித்துவிட்டுதான் மறுவேலை என்றாய்! அவர்களைப் பார்த்த உடன் உன் உறுதியை இழந்துவிட்டாய்?
இந்தப் போர் எதனால் என்பதனை நீதானே நேற்று எனக்கு நினைவூட்டினாய்.
உனக்கும் உன்னவர்களுக்கும் சொந்தமானவற்றைச் சதித் திட்டம் தீட்டி அபகரித்தனர்; உனது மனையாளைச் சபை நடுவினில் துகில் உரித்தனர்; அதனைக் கண்டு தொடையைத் தட்டியவர்கள்தானே உனது மாமனும் மைத்துனர்களும், உன் சகோதர்களும்!
இப்பொழுது நீ ஆசான்கள் என்றும், உன்னை வளர்த்த தாத்தா என்றும் சொல்பவர்கள் அந்த அநீதியை, அநியாங்களைத் தடுக்க முன் வரவில்லையே!
என்ன அர்ஜுனா? என்ன குழப்பம்? என்று மேலும் தொடர்கிறார்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments