28/12/2024, பகவத்கீதை, பகுதி 134
- mathvan
- Dec 28, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
நாம் மீண்டும் அந்த 24 தத்துவங்களை மேலிருந்து கீழாகப் பார்ப்போம்.
சிவ தத்துவங்கள் ஐந்து, வித்யா தத்துவங்கள் ஏழு. ஆக மொத்தம் பன்னிரண்டு தத்துவங்கள். இப்பொழுது இந்த உலகிற்குள் அந்த ஆன்மா விழ வேண்டும்! அப்படியே விழ இயலாது. இன்னும் அது சூக்குமமாகவே இருக்கிறது. அதற்குத் தனு, கரண, புவன, போகங்களைப் பூட்ட வேண்டும். இவை மூலப் பிரகிருதியில் நிகழும். மூலப் பிரகிருதி என்பது வேறு ஒன்றுமன்று. நம்மைச் சுற்றியுள்ள இயற்கைதான்! இதனைப் பிரகிருதி மாயை என்கிறார்கள்.
முதலில் சித்தம் (1) தோன்றும். இதனுள்தான் இந்த முக்குணங்கள் சேரும். பின்பு அதற்கு அறிவு கூட்டப்படும். அஃதாவது புத்தி (2); பின்பு அகங்காரம் (3) கூட்டப்படும். அகங்காரம் இல்லையென்றால் வினைகள் இருக்கா.
இந்த அகங்காரம் மூன்றாகப் பிரியும். அவை: சாத்விக அகங்காரம், இராசச அகங்காரம், தாமச அகங்காரம்.
சாத்விகக் கூறிலிருந்து மனம் (4) தோன்றும். பின்னர் அறிவுக் கருவிகள் என்னும் ஞானேந்திரியங்கள் தோன்றும். அவையாவன: செவி (5), மெய் (6), கண் (7), நாக்கு (8), மூக்கு (9) ஐந்து புலன்களும் தோன்றும்.
இராசச கூறிலிருந்து செயல் கருவிகள் அஃதாவது கன்மேந்திரியங்கள் தோன்றும். அவையாவன: வாய் (10), கால் (11), கை (12), எருவாய் (13), கருவாய் (14).
கருவாய் என்பது உயிர் பெருக்கத்திற்குக் காரணமாக அமையும் உறுப்பு (genitals); எருவாய் என்பது கழிவு நீக்கத்திற்குக் காரணமாக இருக்கும் உறுப்பு.
தாமச கூற்றிலிருந்து தன் மாத்திரைகள் ஐந்து தோன்றும். இது வேறு ஒன்றுமல்ல. அனுபவங்களாக உள்வாங்கும் உணர்வுகள். அவையாவன: ஓசை (15), ஊறு (16), ஒளி (17), சுவை (18), நாற்றம் (19).
அடுத்து ஐந்து மகா பூதங்கள் தோன்ற வேண்டும்.
ஒசையிலிருந்து ஆகாசம் (20) தோன்றும். அஃதாவது ஒசை என்பது குணம், அந்தக் குணக்கலவைதான் ஆகாசம்! ஆகாசம் எதுவென கண்டுபிடிக்க வேண்டுமா அதனுள் ஒசை இருக்கின்றதா என்று பாருங்கள்.
மண்சட்டியைத் தட்டி காதருகினில் வைத்துப் பார்ப்பார்களே கவனித்துள்ளீர்களா? அந்த ஓசை சிந்தாமல் சிதறாமல் வெளியே வர வேண்டும். இல்லையென்றால் அங்கே அறுதியிட்ட வெளியில்லை! அந்தப் பானை ஓட்டை என்று பொருள்!
ஆங்கே உணர்வு சப்தம் மட்டுமே!
அடுத்து ஊறு (தொடு உனர்வு), இந்த ஊறு என்னும் குணத்திலிருந்து காற்று (21) என்னும் பூதம் பிறக்கும். காற்றிற்கு இரு உணர்வு, அவை: சப்தம் மற்றும் உனர்வு.
அடுத்து ஒளி, ஒளியென்னும் குணத்திலிருந்து நெருப்பு (22) என்னும் பூதம் தோன்றும். இதற்கு மூன்று உணர்வு. அவை: சப்தம், உணர்வு, காட்சி. அஃதாவது காட்சிக்குப் புலப்படும் முதல் பூதம் இஃது!
அடுத்துச் சுவை. இதனிலிருந்து நீர் (23) என்னும் பூதம் தோன்றும். இதற்கு நான்கு உணர்வு. அவை: சப்தம், உணர்வு, காட்சி, சுவை. எந்தப் பாத்திரத்தில் இருக்குமோ அந்தப் பாத்திரத்தின் வடிவம் எடுக்கும். கெட்டிப்படாத வடிவம்!
இறுதியாக நாற்றம். இதனிலிருந்து நிலம் (24) என்னும் பூதம் தோன்றும். இதற்கு ஐந்து உணர்வு. அவை: சப்தம், உணர்வு, காட்சி, சுவை, நாற்றம் (வாசனை).
மண்ணிலிருந்துதான் வாசம் வரும். அதனால்தான் மண் வாசனை என்கிறார்கள்.
கல்லாக இருந்த ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி உடல்-உயிரொடு நிலத்திற்குள் விட்டாச்சு!
இனிமேல், அனுபவி இராஜா அனுபவி!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments