top of page
Search

30/08/2024, பகவத்கீதை, பகுதி 16

  • mathvan
  • Aug 30, 2024
  • 1 min read

அன்பிற்கினியவர்களுக்கு:


அவர்: அர்ஜுனா உனக்கு வாழ்நாள் முழுவதும் குழப்பம். கன்னியை வென்றாய். மணம் முடிக்கத் துணிந்தாய். அழைத்துக் கொண்டு வந்தபின் அன்னையிடம் சொல்லத் தயக்கம்.


கன்னியைக் கனியென்றாய்! பிச்சைப் பெற்று வந்தேன் என்றாய்! அன்னை அக்கனியை ஐவரும் பகிர்ந்துண்ணுங்கள் என்றாள். அப்பொழுதாவது உன் வாயைத் திறந்தாயா? இல்லை.


மறுப்பேதும் சொல்லாமல் அவ்வாறே ஆகட்டும் என்றாய்!


ஒவ்வொரு முறையும் உன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினை காற்றிலே பறக்கவிடும் வகையினில் உன் செயல்களை வடிவமைத்துக் கொள்கிறாய்.


ஏகலைவன் என்பான் வில்வித்தையைக் கற்க குரு துரோணரிடம் கேட்க அவர் உன் முகத்தைப் பார்த்தார். உன் முகத்தில் தோன்றிய பயத்தைக் கண்டு அவனுக்குக் கற்பிப்பதை மறுத்தார். அவரையும் அறம் மறக்கச் செய்தாய். நீ மகிழ்ச்சி கொண்டாய். எங்கே உனது அறம்?


அந்த ஏகலைவன் அவனே கற்றான். பெரும் வில்லாளியானான். நீ உன் ஆசிரியனைக் குறை கூறினாய். அவரையும் மகா பாதகச் செயலைச் செய்யத் தூண்டி அவனின் கட்டை விரலைத் துண்டாடினாய். நீ மகிழ்ச்சி கொண்டாய். அப்பொழுதும் உனது மனம் அமைதியாகவே இருந்தது. எங்கே உனது அறம்?


போட்டியில் கர்ணன் உன்னை வென்றுவிடுவானோ என்று பதைத்தாய். அதைக் கண்ட குரு கிருபர் அந்த ஆட்டத்தைக் கலைத்தார். (காண்க https://foxly.link/easythirukkural_கற்றவற்கு)


நீ மகிழ்ச்சி கொண்டாய். அப்பொழுதும்கூட உனது மனம் அமைதியாகவே இருந்தது. எங்கே உனது அறம்?


அப்பொழுதெல்லாம் உன் மனம் தேடாத அமைதியை இப்பொழுது தேடக் காரணம் என்ன? இன்னும் ஏதேதோ பரமாத்மாவின் மனத்தில்!


இப்படியெல்லாம் பரமாத்மா கேட்க நினைத்திருப்பார். ஆனால், இவற்றையெல்லாம் சுருக்கி உன் நிலைக்கு நீ சொல்வன காரணங்கள் அல்ல. இதற்குக் காரணம் உன் “குணமும் செயல்களும்”. அந்த உண்மைகளை உனக்குச் சொல்கிறேன். உன்னையே நீ அறிவாய்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page