top of page
Search

16/08/2024, பகவத்கீதை, பகுதி 2

  • mathvan
  • Aug 16, 2024
  • 2 min read

Updated: Jan 13

 மனம் மொழி மெய்களால் என்னருமை ஆசிரியப் பெருமக்களைப் போற்றிப் பணிந்து தொடர்கிறேன்.


அன்பிற்கினியவர்களுக்கு:


சூத்திர நூல்களுக்குக் காலம் தோறும் உரைகளும், மொழி பெயர்ப்புகளும், விளக்கங்களும் விரிந்து கொண்டே போகும்.

சிவஞானபோதம் என்பது மெய்கண்டதேவர் பெருமான் 13ஆம் நூற்றாண்டில் அருளிய சைவ சமய சாத்திர சூத்திரம். பன்னிரண்டே சூத்திரங்கள். இன்றளவும் அவற்றை விரித்துப் பல நூல்களும் உரைகளும் வந்த வண்ணமே உள்ளன.


சமயக் குரவர்கள் நால்வரையும் சந்தானக் குரவர்கள் எண்மரையும் பெற்ற சிறப்புக் கொண்டது சைவ சமயம்.


குரவர்கள் என்றால் குரு என்று பொருள்.


சமயக் குரவர்கள் அருளியவை தோத்திரங்கள் என்றும் சந்தானக் குரவர்கள் அருளியவை சாத்திரங்கள் என்றும் போற்றப்படுகின்றன.


சமயக் குரவர்கள் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி பெருமான், மாணிக்கவாசகர் பெருமான் ஆகியோர் ஆவர். இவர்கள் அன்பையும் பக்தியையும் கொண்டு மன அமைதியைத் தேட வழி வகுத்தவர்கள்.


சந்தானக் குரவர்கள் அகச் சந்தானக் குரவர்கள், புறச்சந்தானக் குரவர்கள் என இரு வகையினர்.


திருநந்திதேவர், சனற்குமாரர் பெருமான், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். இவர்களின் வழித் தோன்றல்களாக உதித்தவர்கள்தாம் புறச்சந்தான குரவர்கள்.

புறச்சந்தானக் குரவர்கள் அருளியவைதாம் நேரடியாக நமக்குக் கிடைக்கப் பெற்றவை.


மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தப் பெருமான், உமாபதி சிவாச்சாரியார் பெருமான் ஆகிய நால்வரும் புறச்சந்தானக் குரவர்கள். இவர்கள் அறிவினைக் கொண்டு மன அமைதியைத் தேடச் சொல்லித் தருபவர்கள்.


மனம் அமைதியை அடைய ஒரு வழி அன்பு; மற்றொரு வழி அறிவு என்பதனைக் கொஞ்சம் நினைவில் நிறுத்துவோம்.


சைவப் பெரியோர்கள் இறைவனை அடைய, அஃதாவது முத்தி, மோட்சம் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அந்நிலையை அடைய நான்கு வழிகளைச் சொல்கிறார்கள். அவற்றை சைவ நாற்பாதங்கள் என்று வழங்குகிறார்கள். அவையாவன: 1. சரியை; 2. கிரியை; 3. யோகம்; 4. ஞானம் என்பன.


இந்நான்கும் ஒவ்வொன்றும் மற்ற பாதங்களோடு கலந்து பதினாறாகவும் விரியும். உதாரணத்திற்கு, சரியையில் சரியை; சரியையில் கிரியை; சரியையில் யோகம்; சரியையில் ஞானம். இவ்வாறே மற்றவையும் விரியும் என்பதனைக் கொள்க.


சரியை என்பது அன்பின் துணையோடு தாமே செய்யும் உடல் சார்ந்த செயல்கள்;


கிரியை என்பது அன்பின் துணையோடு சான்றோர்கள் வகுத்து வைத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி செய்யும் உடல் சார்ந்த செயல்கள்;


யோகம் என்பது அறிவின் துணை கொண்டு அருளுடன் செய்யும் செயல்களில் ஒன்றிப்போதல்;


ஞானம் என்பது அறிவினைக் கூர்மைப் படுத்தி அருள் மயமாக உள்ளுக்குள் ஒன்றிப்போகும் வகையினில் செயல்களைப் பற்றில்லாமல் செய்தல்.


தோத்திர நூல்கள் எடுத்து இயம்புவன சரியையும் கிரியையுமாம்;


சாத்திர நூல்கள் எடுத்துச் சொல்வன யோகமும் ஞானமுமாம்.


செயல்கள் என்ற சொல்லிற்கு இறைவனை வழிபடல் என்பார்கள் சைவச் சமயப் பெரியோர்கள்.


சரியை நிலையில் இருந்து முத்தி அடைந்தவர் திருநாவுக்கரசர் பெருமான். இந்த வழிமுறைக்கு தாச மார்க்கம் என்று பெயர். ஆண்டான் – அடிமை பாவத்தைக் கொள்வர்.


கிரியை நிலையில் நின்று முத்தி அடைந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான். இந்த வழிமுறைக்குச் சற்புத்திர மார்க்கம் என்பர். பெற்றோர் – குழந்தை பாவத்தைக் கைக் கொள்வர்.


யோக நிலையில் நின்று முத்தி பெற்றவர் சுந்தர மூர்த்தி நாயனார். இந்த வழிமுறைக்கு சக மார்க்கம் என்பர். நண்பர்கள் போன்ற பாவத்தைக் கொள்வர்.


ஞான நிலையைக் கொண்டு முத்தி பெற்றவர் மாணிக்கவாசகப் பெருமான் என்பர். இந்த வழிமுறைக்குச் சன் மார்க்கம் என வழங்குவர். இறைவனுடனே ஒன்றிவிடுவர்.


இவையெல்லாம் குறிப்புகளே!


இது என்ன இவ்வளவு பெரிய இடையீடாக நீட்டிக் கொண்டு போகிறாயே என்று கேட்கிறீர்களா?


இந்த முன்னுரை இன்னும் முடியவில்லை. அடிப்படையை ஒரளவிற்குப் புரிந்து கொண்டால் எளிதாகச் செல்லாம் என்பது எனது கருத்து.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page